வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு நடைமுறையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , இன்போசிஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 முக்கிய ஐடி நிறுவனங்களுக்குத் தடை விதித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றது முதல் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று என்று பேசி வருகிறார். அதன் அடிப்படையில், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டமான பெர்ம் நடைமுறையில் குறிப்பிட்ட நிறுவனங்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட், அடோப், காக்னிசன்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் கேப்ஜெமினி ஆகிய 8 நிறுவனங்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சார்பில் புதிதாகச் சமர்ப்பிக்கப்படும் பெர்ம் விண்ணப்பங்களை ஏற்கவோ, ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைச் செயல்படுத்தவோ முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கும், அங்கு சட்டப்பூர்வமாகப் பணிபுரிவதற்கும் அனுமதி வழங்கும் ஆவணம் கிரீன் கார்டு எனப்படுகிறது. வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பெர்ம் நடைமுறை முக்கியமான படியாகும். இந்த நடைமுறையில், குறிப்பிட்ட பணிக்கு, தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை என்பதையும், வெளிநாட்டுத் தொழிலாளரைப் பணியமர்த்துவதால் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் பாதிக்கப்படாது என்பதையும் நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.
அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் பலர், தங்களது நிறுவனங்கள் வாயிலாக கிரீன் கார்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நடவடிக்கையால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைகள் தாமதமடையலாம். குறிப்பாக, நீண்டகாலமாக நிரந்தரக் குடியுரிமைக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
எனினும், இந்தத் தடை காரணமாக ஏற்கெனவே வழங்கப்பட்ட கிரீன் கார்டுகள் ரத்து செய்யப்படாது.. அதேபோல், எச்-1பி விசாவும் தானாக ரத்தாகாது. ஆனால், நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான முக்கியமான ஒரு வழிமுறை பாதிக்கப்படுவதால், இந்திய ஊழியர்கள் அமெரிக்காவில் நீண்டகாலம் தங்கிப் பணிபுரிவது தொடர்பாக நிச்சயமற்ற நிலை ஏற்படலாம்.