வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான (இடைக்கால தேர்தல்) வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அவரது பதவி காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது. இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டதாகும். செனட் சபை, பிரதிநிதிகள் சபை என 2 அவைகளை கொண்டுள்ளது. செனட் சபைக்கு 100 பேரும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில் ஒரு மாகாணத்திற்கு தலா 2 செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேவேளை, பிரதிநிதிகள் சபை மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதேவேளை, செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடையும்போது உடனடியாக தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் செனட் சபையில் 3ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைந்துள்ளதால் அந்த இடங்களுக்கும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பதவி காலம் 4 ஆண்டுகள் என்றபோதும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான (இடைக்கால தேர்தல்) வாக்குப்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும், செனட் சபைக்கு 35 இடங்களுக்கும், 36 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி ஜனநாயக கட்சி போட்டியிடுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவர் ஆவார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜோ பைடன் போன்றோர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அந்த கட்சியை நாட்டின் சட்டம், அரசின் செலவுகளுக்கு அனுமதி அளித்தல், அரசின் செயல்பாடுகளை ஆராய்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். குறிப்பாக, அரசின் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்குவதில் நாடாளுமன்ற அனுமதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இடைக்கால தேர்தலில் ஏற்கனவே தபால் வாக்குகள் மற்றும் இமெயில் மூலமும் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டு அமெரிக்க இடைக்கால தேர்தலில் 53 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்களது வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். இது, 2022-ல் நடந்த முந்தைய இடைக்காலத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், முன்கூட்டிய வாக்களிப்பில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க அதிகபட்ச அளவாகும்.