இஸ்லாமாபாத்,
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் அவர் கூறியதாவது;-
“அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலுக்கு முன்பு 300 மில்லியன் டாலராக இருந்த பாகிஸ்தானின் எண்ணெய் இறக்குமதி செலவு, தற்போது 800 மில்லியன் டாலராக உயர்ந்து, பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு வாரத்தில் பெட்ரோலிய நுகர்வு குறைந்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரு பணிக்குழு நிலைமையை தினசரி கண்காணித்து வருகிறது. சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சிகள் தேவை. மத்திய கிழக்கு பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பாகிஸ்தான் நேர்மையான முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 11-ந்தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் 21 மணி நேரம் நீடித்ததுடன், ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர முன்னேற்றத்தையும் அடைந்தது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், துணைப் பிரதமர்/வெளியுறவு மந்திரி இஷாக் டார் மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் பங்களிப்புகளுடன், பாகிஸ்தான் நேர்மையான மற்றும் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகளின் விளைவாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.