உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி ராஜினாமா

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் இந்து என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு "மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய்" இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது, கப்பார்ட் துளசி தனது இந்த முடிவை டிரம்பிடம் தெரிவித்தார். தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தை (ODNI) அவர் வழிநடத்தும் கடைசி நாள் ஜூன் 30 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. என்று கப்பார்ட் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியிருந்தார்.

டிரம்ப் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார். "துரதிர்ஷ்டவசமாக, துளசி கப்பார்ட் ஜூன் 30-ஆம் தேதி நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார். கப்பார்ட் விலகிய பிறகு, தேசிய உளவுத்துறையின் முதன்மை துணை இயக்குநர் ஆரோன் லூகாஸ், தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராகப் பணியாற்றுவார்," என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனராக செயல்பட்டு வந்த துளசி கப்பார்ட் அமெரிக்கராக இருந்தாலும் இந்து மதத்தை தழுவியவர். இவர்தான் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.