அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் உற்பத்தித் துறைகள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும், இந்தியா தனது சந்தையை வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் அணுக அனுமதிப்பதில்லை என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் , பிரிவு 301-ன் கீழ் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை இந்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் எந்தவொரு துறையிலும் கட்டமைப்பு ரீதியிலான உபரி உற்பத்தித் திறன் இல்லை என்பதே விசாரணையின்போது இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்த நிலைப்பாடாகும்.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளநடைபெற்று வருகின்றன. வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இந்தியா உறுதியாக உள்ளது..இவ்வாறு மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால் இந்தியப் பொருட்களுக்கான வரி 17 சதவீதமாக இருக்கும் என்றும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 25 சதவீதமாக உயரும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.இந்த வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து ஜனவரி 5-ம் தேதி வரை கருத்துகள் பெறப்பட உள்ளன. இதுதொடர்பான பொது விசாரணை ஜனவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.