உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகை

மேற்காசிய போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.இந்த உயர்மட்ட வருகையை முன்னிட்டு, கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகம் மற்றும் விக்டோரியா நினைவகம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்க் ரூபியோ, டெல்லியில் பிரதமர் மோடியையும் இன்று சந்தித்து பேசுகிறார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேற்காசிய போரால், சர்வதேச அளவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வரும் சூழலில், அமெரிக்க வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்கோ ருபியோ பதவியேற்ற பின்பு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். நாளை டெல்லியில் நடைபெறும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திலும் மார்க் ரூபியோ பங்கேற்கிறார். ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்கும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.