வாஷிங்டன்,
ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையிலான போரை விரும்பாத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
போர் நடத்த ரஷியாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை ஆகும். எனவே, ரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷியாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று டிரம்ப் கணக்கு போட்டார்.
ரஷியா மீது பொருளாதார தடை விதித்ததுடன், ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிகமான வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்தார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், கூடுதல் வரி திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், சில மாதங்கள் கழித்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இதுதொடர்பான மசோதாவும் உருவாக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த முயற்சியை டிரம்ப் கைவிட்டார்.
அதே சமயத்தில், ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மற்றொரு மசோதாவை ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ரிச்சர்டு புளுமெந்தல், குடியரசு கட்சி செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹம் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
லிண்ட்சே கிரஹம் கடந்த 11-ந் தேதி மரணம் அடைந்தார். அதனால் அவரது நினைவாக 'லிண்ட்சே ஓ கிரஹம் ரஷிய பொருளாதார தடை சட்டம்-2026' என்று மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாகியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இம்மசோதா வகை செய்வதாக ரிச்சர்டு புளுமெந்தல் கூறியுள்ளார். அதாவது, 5 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த மசோதா, 60-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ரஷிய அரசியல் தலைமை, நிதி அமைப்புகள், எரிசக்தி துறை ஆகியவற்றின் மீது கட்டாய பொருளாதார தடை விதிப்பதன் மூலம், உக்ரைன் போரை நடத்த தேவையான நிதி, ரஷிய அதிபர் புதினுக்கு கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதும் மசோதாவின் நோக்கம் ஆகும்.
மேலும், ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் 5 நாடுகள், எவ்வளவு கச்சா எண்ணெய் வாங்குகின்றன என்பதை 180 நாட்களுக்கு ஒரு தடவை மறுஆய்வு செய்து, எண்ணெய் கொள்முதலுக்கு ஏற்ப வரிவிதிப்பை மாற்றி அமைக்குமாறு அமெரிக்க வர்த்தக பிரதிநிதியை மசோதா கேட்டுக்கொண்டுள்ளது.
அதே சமயத்தில், ரஷியாவிடம் கியாஸ் வாங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது மொத்த கியாஸ் தேவையில் 15 சதவீதம் மட்டுமே ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதால், அந்நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல், தனது அணு உலைகளுக்கு ரஷியாவிடம் அமெரிக்கா வாங்கும் யுரேனியத்துக்கும் மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி, விண்வெளி ஆகிய துறைகளில் அமெரிக்க-ரஷிய ஒத்துழைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கும் மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளை தண்டிக்க வரிவிதிப்பை ஒரு புவிஅரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றம் வெளிப்படையாக அங்கீகரிப்பதாக கருதப்படும்.