சியோல்,
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா - தென்கொரியா அடுத்த மாதம் மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. அடுத்த மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்த ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது. தென்கொரியாவில் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியில் அந்நாட்டு வீரர்களுடன் சேர்ந்து அமெரிக்க வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா எவ்வாறு எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.