வாஷிங்டன்,
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பசுபிக், கரீபியன் கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்க கடற்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
போதைபொருள் கடத்தி வந்ததாக பசுபிக், கரீபியன் கடல் பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 69 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 231 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.