வாஷிங்டன்,
வரும் 2070-ம் ஆண்டில் உலகில் அதிக இந்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா 5-வது இடத்திற்கு முன்னேறும் என 'பியூ' ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலகில் அதிக இந்துக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா (111 கோடி), நேபாளம் (2.35 கோடி), வங்கதேசம் (1.31 கோடி), பாகிஸ்தான் (50 லட்சம்) ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. வரும் 2070-ம் ஆண்டிலும் இந்த முதல் 4 இடங்களில் எந்த மாற்றமும் இருக்காது என 'பியூ' ஆராய்ச்சி மையம் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சுமார் 129 கோடி இந்துக்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் இந்துக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி சுமார் 1 கோடியாகவும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 30.4 லட்சம் இந்துக்களுடன் 7-வது இடத்தில் இருந்த அமெரிக்கா, வரும் 2070-ல் 5-வது இடத்திற்கு முன்னேறும். குடியேற்றம் காரணமாக அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை எட்டும் என இந்த ஆய்வு கூறுகிறது. அதே சமயம், கடந்த 2020-ல் 5-வது இடத்தில் இருந்த இந்தோனேசியா (43.5 லட்சம்), 2070-ல் 6-வது இடத்திற்குச் செல்லும்.
உலகம் முழுவதும் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 19.9 கோடி அதிகரித்து, 2070-ல் 138 கோடியை (1.38 பில்லியன்) எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்துக்களின் சதவீதம் 15%-லிருந்து 14%-ஆகச் சற்று குறையும். மேலும், வரும் 2070-லும் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய 2 நாடுகள் மட்டுமே இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளாக நீடிக்கும்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா சுமார் 30 லட்சம் இந்துக்களுடன் உலகின் முதல் 10 நாடுகளுக்குள் 9-வது இடத்தைப் பிடிக்கும் எனவும், ஐக்கிய அரபு அமீரகம் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறும் எனவும் 'பியூ' ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வறிக்கை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.