வாஷிங்டன்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் நடத்திய தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியதுடன், கப்பல்களுக்கு வரி விதிக்கவும் முடிவு செய்தது.
இந்த சூழலில், ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை மறுபுறம் நடந்து வருகிறது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி மற்றும் எண்ணெய் அதிகாரிகளை இன்று சந்தித்து பேசவுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சிறிய கிராமத்தில் மலைப்பிரதேச ரிசார்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஈரானிய அதிகாரிகளை சந்தித்து முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்த வான்ஸ் திட்டமிட்டு இருந்த நிலையில், ஈரான் அதனை ரத்து செய்தது.
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.
இந்த சூழலில், தங்களுடைய முக்கிய அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு இன்று பயணம் செய்வார்கள் என ஈரான் அரசு ஊடகம் நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானின் பேச்சுவார்த்தை குழுவும் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது என அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தகவல் தெரிவித்தது.
இதேபோன்று முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கு பெற்று, ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் சென்றுள்ளனர்.