மகபூபாபாத்
அமெரிக்காவில் லாரி மோதி தெலுங்கானா பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டம் எதுலபரத்தை சேர்ந்தவர் தரம் சீனிவாச ராவ். இவரது மகள் சுப்ரியா (வயது 31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மகபூபாபாத் நகரை சேர்ந்த கொடுமுரி ரஞ்சித் என்பவரை மணந்தார். ரஞ்சித் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். கணவருடன் வசித்து வந்த சுப்ரியா அங்கு ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஆதித்யா என்ற 3 வயது மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவகத்தை மூடிவிட்டு, சுப்ரியா, இந்தியாவை சேர்ந்தவரான தனது தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி அவர்களுடைய கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்ரியா உயிரிழந்தார்.
அவரது தோழி படுகாயம் அடைந்தார். இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரியாவின் தந்தை தரம் சீனிவாசன் கேட்டுள்ளார்.