கராகஸ்,
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக அடுத்தடுத்து பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.
இந்த அதிபயங்கர இயற்கைச் சீற்றத்தினால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய நகரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து. இடிந்து தரைமட்டமாகின. 10 அடுக்குமாடி கட்டிடங்கள் கூட பாய் சரிவது போலத் தட்டையாகச் சரிந்து விழுந்துள்ளன.
வரலாறு காணாத பேரிடரால், அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அன்று இரவில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். சேதமடைந்த ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளுக்காக 200 மில்லியன் (சுமார் ரூ.2,000 கோடி) அமெரிக்க டாலர் புனரமைப்பு நிதியை அரசாங்கம் ஒதுக்குவதாக அறிவித்தார்.
இந்த பேரிடரில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனரகப் பொக்லைன் எந்திரங்கள் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் கைகளாலேயே கட்டிட இடிபாடுகளை அகற்றி உறவினர்களைத் தேடி வருகின்றனர். சிமெண்டு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஒரு பெண்ணின் வெறும் பாதங்கள் மட்டும் வெளியே தெரிந்த காட்சி, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து செல்போனில் உதவி கேட்கும் காட்சிகள், இடிபாடுகளுக்குள் சிக்கியோரின் முனகல் சத்தம், குடும்பத்தினரை இழந்து தேடுவோரின் அலறல் சப்தம் உள்ளிட்ட நெஞ்சை உலுக்கும் காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.
தலைநகர் கராகஸுக்கு வடக்கே உள்ள லா குவைரா கடற்கரைப் பகுதி மிகக் கடுமையான சேதத்தையும் உயிரிழப்புகளையும் சந்தித்தது. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் திறந்தவெளிகளில் ஒன்றுகூடி இரவைக் கழித்தனர். அங்கு அமைந்துள்ள நாட்டின் முதன்மை விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் சுவிட்சர்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் சிறப்பு மோப்ப நாய்களுடன் வெனிசுலா வந்துள்ளதால் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் வெனிசுலாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இருந்து தவிக்கிறார்கள். இதையடுத்து அந்த நாட்டுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.