உலக செய்திகள்

பப்புவாவில் மீண்டும் வன்முறை : அரசு கட்டிடங்களுக்கு தீவைப்பு; 27 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா பிராந்தியத்தில், தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஜெயபுரா,

கடந்த மாதம் இந்தோனேசியாவின் சுதந்திர தினத்தின்போது, அங்குள்ள அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. பப்புவாவின் நாடாளுமன்றம் உள்பட எண்ணற்ற அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்த நிலையில், பப்புவா பிராந்தியத்துக்கு உட்பட்ட வாமினா நகரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக வதந்திகள் பரவின. இதை கண்டித்து வாமினா நகரிலும், பப்புவா தலைநகர் ஜெயபுராவிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. வாமினா நகரில் உள்ள அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதே போல் ஜெயபுராவிலும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

இதையடுத்து இரு நகரங்களிலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த வன்முறையில் வாமினா நகரில் 23 பேரும், ஜெயபுராவில் ஒரு ராணுவவீரர் உள்பட 4 பேரும் பலியாகினர். படுகாயம் அடைந்த 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.