டெஹ்ரான்,
டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை பறிகொடுத்ததால் ஆவேசத்துடன் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலை நோக்கி அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகிறது.
மறுபுறம் அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உலகையே உலுக்கி வரும் இந்த போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர்வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நீரிணையை கடக்க முயற்சிக்கு எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும், ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற ஈரான் அனுமதிக்காது என்றும் எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகளும் தாக்கப்படலாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
நீரிணை முடல் காரணமாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (20%) எண்ணெய் போக்குவரத்து மற்றும் கத்தாரின் பெரும்பாலான எரிவாயு விநியோகம் இந்த ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.