உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்: அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு; விவரம் வெளியீடு

போரால் அமெரிக்காவின் வீரர்கள் 18 பேர் பலியாகி உள்ளனர். 830 பேர் காயமடைந்து உள்ளனர் என பென்டகன் அமைப்பு தெரிவிக்கின்றது.

நியூயார்க்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போதிலும், 7 மாதங்களாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் செலவு

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில், கடந்த 3-ந்தேதி வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் மொத்த செலவு ரூ.4.18 லட்சம் கோடியாக (43.6 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் ரூ.2.69 லட்சம் கோடியாக (28.1 பில்லியன் டாலர்) உள்ளது. தொடர்ந்து நடந்து வரும் போரால், மாதம் ஒன்றிற்கு ஏறக்குறைய ரூ.28,780 கோடி (3 பில்லியன் டாலர்) செலவாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இவற்றில், வெடிபொருட்களுக்கு மட்டும் பாதிக்கும் மேற்பட்ட நிதி செலவாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிக்கை

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது. போர் கப்பல்கள், விமானங்கள் மற்றும் விமான தளங்களை இயக்குவதற்கான செலவுகளும் இதில் அடங்கும். இவற்றுடன் ஆயுதங்கள் இழப்பு மற்றும் படை வீரர்களுக்கு மருத்துவ உதவி ஆகியவையும் இதில் சேரும்.

பென்டகன் தகவல்

போரால் அமெரிக்காவின் வீரர்கள் 18 பேர் பலியாகி உள்ளனர். 830 பேர் காயமடைந்து உள்ளனர் என பென்டகன் அமைப்பு தெரிவிக்கின்றது.

ஈரானின் தாக்குதலில், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படை தளங்களின் கட்டிடங்களும் கூட சேதமடைந்து உள்ளன.

SCROLL FOR NEXT