தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்தம் நீட்டிப்புக்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட கூடும் என்று ஈரானின் ஆயுத படைகள் இன்று எச்சரித்து உள்ளன. இதுபற்றி கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் துணை ஆய்வாளர் சர்தார் ஆசாதி இன்று கூறும்போது, அமெரிக்கா எந்தவித ஒப்பந்தத்திற்கும் உடன்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
அமெரிக்க அதிகாரிகளின் செயல்களும், அறிக்கைகளும் ஊடகம் சார்ந்த நோக்கிலேயே உள்ளன. அவர்கள், எண்ணெய் விலை குறைப்பை தடுக்கும் முதன்மையான நோக்கம் கொண்டுள்ளனர்.
2-வது, அவர்கள் உருவாக்கிய குழப்பத்தில் இருந்து அவர்களே வெளியேற முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கர்களின் எந்தவித புதிய தாக்குதல்களையோ அல்லது முட்டாள்தனங்களையோ எதிர்கொள்ள ஈரானின் ஆயுத படைகள் முழு அளவில் தயாராக உள்ளன என்றார்.
மேற்காசிய மோதலில், இதுவரை 8 நாடுகளில் அமைந்த 16 அமெரிக்க தளங்களை, ஈரான் தாக்கி சேதப்படுத்தி உள்ளது. அவற்றில் ஒரு சில தளங்கள் தற்போது உபயோகமற்ற நிலையில் உள்ளன. அவற்றில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாடு பலத்த பாதிப்படைந்து உள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிக அளவில் உள்ளதுடன், பெரிய அமெரிக்க ராணுவ மையங்களில் ஒன்றாகவும் குவைத் உள்ளது.