உலக செய்திகள்

வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நிறைவு

குவாட் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட உச்சி மாநாடு நிறைவு பெற்றது.

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார். இதையடுத்து குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய நால்வரும் சென்றனர். இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு தொடங்கியது.

இந்த உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2004 சுனாமிக்கு பிறகு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவ முதல் முறையாக நான்கு நாடுகள் ஒன்றிணைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும் என்றும் குவாட் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் உலகம் முழுவதிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பேசிய போது, 2011 புகுஷிமா அணுசக்தி பேரழிவுக்குப் பிறகு ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, தற்போது நீக்கியதற்காக அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு நான்கு நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளை பிரதிபலிக்கிறது என்றும் இன்றுவரை, பிராந்திய சவால்கள் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதன் முழுமையான ஒத்துழைப்பை குவாட் கூட்டமைப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பேசிய போது, நாம் ஒரு சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகள் எவ்வாறு காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதே குவாட் ஆகும். இந்த நேரத்தில் இந்தோ-பசிபிக்கை விட ஆற்றல்மிக்க உலகின் எந்தப் பகுதியும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது அழைப்பை ஏற்று குவாட் உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த கூட்டமைப்பின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த குழுவில் உள்ளவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான பார்வை கொண்டவர்கள் என்று தெரிவித்த அவர், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த உச்சி மாநாட்டின் போது கொரோனா தடுப்பு, ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நிறைவு பெற்றுள்ளது.