அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளித்துவிட்டு, நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அதுவரை ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு இதனால் தற்போது வரை இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது: “நமது கடற்படையினர் ஈரான் கப்பலின் மேலே இறங்கினர். பின்னர் அதனை முழுவதுமாகக் கைப்பற்றினர். நாம் அந்த சரக்குக் கப்பல் மற்றும் அதனுள் இருந்த எண்ணெயையும் கைப்பற்றினோம். இது மிகவும் லாபகரமான தொழில். நமது படையினர் ஒருவகையில் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர். அவர்கள் விளையாட்டாக அதில் ஈடுபடவில்லை” என்றார்.