காத்மாண்டு,
நேபாளத்திற்கு நிதியுதவி வேண்டாம்.. நீதி மற்றும் இழப்பீடு வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார்.
திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள், மண், சேறு - சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 1000 அயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கிறார்கள். சேறு சகதிகள் நிறைந்து உள்ள பகுதிகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர்.
பேரிடரில் சிக்கியுள்ள நேபாளத்துக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியா ஏற்கனவே நிவாரண பொருட்கள். மீட்புக்குழு நிபுணர்கள் என பல்வேறு வகைகளில் உதவியுள்ளது. இதைப்போல சீன அரசு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.19 கோடி) உதவியாக அறிவித்தது. இதைப்போல அந்த நாட்டு செஞ்சிலுவை சங்கமும் 2 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.2 கோடி) அறிவித்தது.
இந்த நிவாரண உதவியை நேபாளத்துக்கான சீன தூதர் ஜாங் மாமிங் நேற்று நேபாள நிதி மந்திரி ஸ்வர்னிம் வாக்லேயிடம் நேரில் ஒப்படைத்தார். மேலும், 'இந்த பேரிடரில் நேபாளம் தனித்து விடப்படவில்லை; சீனா எப்போதும் நேபாளத்துடன் இருக்கிறது' என்று சீன அதிபர் ஜின்பிங் சார்பில் வாக்லேயிடம் தெரிவித்தார்.
இந்தநிலையில், நேபாளம் பெருவெள்ள பாதிப்பிற்கு இழப்பீடு கொடுக்க வேண்டியது வல்லரசு நாடுகளின் தார்மீகப் பொறுப்பு. அவர்களால் ஏற்படும் உலகளாவிய காலநிலை மாற்றத்தால் நேபாள பனிப்பாறைகள் உருகுவதும், பெருவெள்ளம் ஏற்படுவதும் தொடர்கிறது. இனி பிற நாடுகளிடம் 'நிதியுதவி' கேட்பதற்குப் பதிலாக, 'நீதி மற்றும் இழப்பீடு' கோருவதே நேபாளத்தின் முதன்மைக் கொள்கையாக இருக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார்.