ஜெனீவா,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இதை செய்ய தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இந்த இறுதி எச்சரிக்கையை ஈரான், ஏளனம் செய்ததுடன், முட்டாள்தனமானது எனக்கூறி நிராகரித்தது. டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கைக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், போர்நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த பதிலை முக்கிய மத்தியஸ்தரான பாகிஸ்தான் மூலம் ஈரான் தெரிவித்துள்ளதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் கூறி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது என ஈரானுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார். அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஈரானின் புஷேர் அணுமின் உற்பத்தி நிலையம் அருகே அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்திற்கு அருகில் தொடரும் ராணுவ நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இத்தகைய நடவடிக்கைகள், கடுமையான மற்றும் நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான கதிரியக்க விபத்திற்கு வழிவகுக்கலாம்.
அதே நேரத்தில், ஈரான், பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள சுற்றுச்சூழலையும் இது சேதப்படுத்தும். எனவே, பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும், மனித வாழ்விற்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதனை தடுப்பதற்கும், மோதலை கைவிட்டு அமைதியான வழியை விரைவாக தேர்ந்தெடுக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.