உலக செய்திகள்

ஹார்மூஸ் ஜலசந்தி அருகே எதிரி டிரோனை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் அறிவிப்பு

அதனை வீழ்த்துவதற்காக நவீன உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்களை ஈரானிய படைகள் தயார் நிலையில் வைத்திருந்தன.

தெஹ்ரான்

உலக நாடுகளுக்கு தேவையான பெரும்பான்மையான சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும். எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலால் இந்த பகுதியில் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் குவாசிம் தீவு அருகே கடல்சார் பகுதிகளில் எதிரி டிரோன் ஒன்றை எங்களுடைய வான் பாதுகாப்பு சாதனங்கள் சுட்டு வீழ்த்தின என ஈரான் இன்று அறிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியான செய்தியில், அந்த ஆளில்லா விமானம், பாரசீக வளைகுடா பகுதிக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனை வீழ்த்துவதற்காக நவீன உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்களை ஈரானிய படைகள் தயார் நிலையில் வைத்திருந்தன.

இதுவே, ஈரானிடம் இருந்து வெளிப்பட்ட ஒரு தெளிவான மற்றும் முடிவான செய்தியாகும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று மற்றொரு செய்தியில், வான் பாதுகாப்பு நடவடிக்கையால், குவாசிம் தீவில் வசித்து வரும் உள்ளூர்வாசிகளுக்கு பலத்த சத்தம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் கேட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், அந்த டிரோன் யாரால் அனுப்பப்பட்டது மற்றும் அதன் உரிமையாளர்கள் யார் என்ற விவரங்கள் ஈரானால் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக ஈரான் அரசின் அதிகாரிகள் தரப்பில் இருந்து, பத்திரிகையாளர்களுக்கும் எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT