உலக செய்திகள்

இக்கட்டான தருணத்தில் துணை நிற்கிறோம்: நேபாள பிரதமரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

புதுடெல்லி,

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி, நேபாள பிரதமர் பாலன் ஷாவிடம் உறுதியளித்தார்.

பெரும் சேதம்

திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் இரண்டு மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் மற்றும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு, குறைந்தது 22 பேரின் உயிரைப் பறித்ததுடன், 400 பேரை காணாமல் போக செய்துள்ளது. அத்துடன், ஆற்றங்கரையோரக்களில் உள்ள வீடுகள் மற்றும் சுமார் ஒரு டஜன் நீர்மின் திட்டங்கள் உட்பட அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் - பிரதமர் மோடி

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது'எக்ஸ்' (X) வலை தளத்தில், “நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு இந்தியா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு அந்த அண்டை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.