உலக செய்திகள்

இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற திட்டமிடுவோம் - இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தகவல்

சாலை பயணத்திற்கு தற்போது நிலைமை சாதகமாக இல்லை என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேம்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில், "சிக்கலில் சிக்கித் தவிக்கும் அனைவருடனும் தூதரகம் தொடர்பில் உள்ளது. தூதரகம் மீண்டும் ஆலோசனை வழங்கியுள்ளது. எகிப்து அல்லது ஜோர்டான் வழியாக இந்தியர்கள் வெளியேற நாங்கள் திட்டமிடுவோம், எந்த பாதை பாதுகாப்பானது என்றும், வாய்ப்பு கிடைக்கும் தருணத்தை எதிர்நோக்கி உள்ளோம். தற்போது, ​​சாலை பயணத்திற்கு நிலைமை சாதகமாக இல்லை. அனைவரும் ஆலோசனைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேலில் உள்ள இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள், குறுகிய கால வணிக பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட இவர்கள் தற்போது நாட்டில் உள்ளனர். இவர்கள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் முன்னர் வழங்கப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றி, சரியான நேரத்தில் உதவி மற்றும் தகவல்தொடர்பை எளிதாக்க கீழே உள்ள இணைப்பில் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.