கர்ப்பிணி மணமகள் 
உலக செய்திகள்

சேற்று வயலில் கவிழ்ந்த திருமண கார்: கர்ப்பிணி மணமகள் பத்திரமாக மீட்பு

தாயும் வயிற்றிலிருந்த குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஹனோய்,

வடக்கு வியட்நாமில் திருமண ஊர்வலத்தின் போது கார் ஒன்று சேறு நிறைந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உள்ளூர் கிராம மக்களின் துரித செயலால் மணமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருமணம்

வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது மணமகன் லி வான் வியட் மற்றும் 19 வயது மணமகள் டாம் தி சுவான் ஆகியோருக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று காலை 10 மணியளவில் தோ கிராமத்திலிருந்து மணமகனின் ஊரான பான் பான் கிராமத்திற்கு திருமண கார் சென்று கொண்டிருந்தது.

விபத்து நடந்தது எப்படி?

மணமகன் வீட்டிற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கார் சென்றபோது, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக காரின் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூங்கொத்து பறந்து முன்பக்கக் கண்ணாடியை மறைத்தது. இதனால் சாலையைப் பார்க்க முடியாமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க, கார் சாலையோரமிருந்த ஒரு மீட்டர் ஆழமுள்ள சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்து ஒரு பக்கமாக சாய்ந்தது.

கிராம மக்களின் துரித மீட்பு

கார் கவிழ்ந்ததும் மணமகள் அமர்ந்திருந்த பக்கத்து ஜன்னல் சேற்றை நோக்கி இருந்ததால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். முதலில் நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து காரைத் தூக்க முயன்றும், அதிக எடை காரணமாக அவர்களால் முடியவில்லை. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த ஏராளமான கிராமவாசிகள் ஒன்றிணைந்து காரை உயர்த்திப் பிடித்தனர். இதன் மூலம் காருக்குள் சிக்கியிருந்த மணமகனும் மணமகளும் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டனர்.

தடையின்றி நடந்த திருமண சடங்குகள்

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், மணமகளின் வெள்ளை நிறத் திருமண ஆடை, முகம் மற்றும் தலைமுடி முழுவதும் சேறு படிந்திருந்தது. இதையடுத்து மணமகள் உடனடியாக மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குளித்து வேறு ஆடை அணிந்த பிறகு திட்டமிட்டபடி திருமண சடங்குகள் இனிதே நடைபெற்றன.

தாயும் வயிற்றிலிருந்த குழந்தையும் நலம்

மேலும், மணமகள் கர்ப்பமாக இருந்ததால் அன்று பிற்பகல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தாயும் வயிற்றிலிருந்த குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT