கவுன் 
உலக செய்திகள்

அமெரிக்காவில் வினோதம்; சேலையை கவுன் என்று பெயர் வைத்து விற்பனை

நம்ம ஊர் பாரம்பரிய சேலைக்கு 'மேக்ஸி டிரஸ்' என்று பெயரிட்டு, 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம், உலகளவில் பெரும் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

அச்சு அசல் நம்ம ஊர் சேலை

அந்த நிறுவனம் தங்களின் புத்தம் புதிய ஆடை வடிவமைப்பு என்று கூறி ஒரு புதிய உடையை சந்தைக்கு கொண்டு வந்தது. ஆனால், அந்த ஆடையின் புகைப்படத்தை பார்த்த இந்தியர்கள் அனைவரும் அப்படியே அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது வேறு ஒன்றும் இல்லை, அச்சு அசல் நம்ம ஊரின் பாரம்பரிய சேலைதான் அது.

26 ஆயிரம் ரூபாய்

சேலையை தங்களின் சொந்த வடிவமைப்பு போல காட்டியது ஒருபுறம் இருக்க, அதன் விலைதான் அனைவரையும் இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ஆடையின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 26 ஆயிரம் ரூபாய். இது என்னடா அப்பட்டமான பித்தலாட்டமாக இருக்கிறது?" என்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும், இணையவாசிகளும் சமூக வலைத்தளங்களில் திரண்டு வந்து அந்த நிறுவனத்தை சரமாரியாக வெளுத்து வாங்க தொடங்கினர்.

பெயரை மாற்றினாலும் விடாத இணையவாசிகள்

இணையவாசிகளின் கொந்தளிப்பையும், தொடர் எதிர்ப்பையும் பார்த்த அந்த நிறுவனம், உடனடியாக ஆடையின் பெயரை மாற்றியது. பூவேலைப்பாடுகள் கொண்ட மேக்ஸி ஆடை என்ற நீளமான பெயரை நீக்கிவிட்டு,சேலையினால் ஈர்க்கப்பட்ட கவுன் என்று மாற்றியமைத்தது. இருப்பினும், இணையவாசிகள் சும்மா விடுவார்களா? "என்னாது.. கவுனா? சேலையை எப்படி கவுன் என்று சொல்லலாம்?" என்று மீண்டும் தங்களின் அடுத்தகட்ட ட்ரொல்களையும், கிண்டல்களையும் ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது!