தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் கடுமையாக தாக்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த தாக்குதலில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், அமெரிக்கா சார்பில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் கப்பல்கள் ஈரானை முற்றுகையிட்டு உள்ளன. ஈரானின் கப்பல்கள் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ விடாமல் அவை தடுத்து வருகின்றன.
இதனால், சரக்கு கப்பல்கள் தேக்கமடைந்து சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற தாக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. உலக நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன.
இந்த நிலையில், ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து மேற்காசிய மோதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பகுதியில் பதற்றம் இன்னும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றி இருதரப்பிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன என தகவல் தெரிவிக்கின்றது.
மேற்காசியாவில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விசயங்கள் பற்றியும் ஆலோசனையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது என அதுதொடர்பான அறிக்கை தெரிவிக்கின்றது.
அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், ஐ.நா. பொது செயலாளர் ஆன்டோனியோ குட்டிரெசை தொடர்பு கொண்ட அராக்சி, அமெரிக்காவின் அதிக அளவிலான கோரிக்கைகள், நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முதன்மையான தடையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
ராணுவ ஆக்கிரமிப்பு, முறிந்து போகும் வாக்குறுதிகள் போன்றவற்றால், ராஜதந்திர முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்து வலுவிழக்க செய்து வருகிறது. ஈரானோ தொடர்ந்து போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என குட்டிரெசிடம் அப்பாஸ் அராக்சி கூறினார்.
எந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் படைகளை பயன்படுத்துதற்கு மறுப்பு தெரிவித்த அவர், மேற்காசியாவில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க ராஜதந்திர முறைகளை கையாள வேண்டும் என்றும் குட்டிரெஸ் கேட்டு கொண்டார்.