லாஸ் ஏஞ்சலஸ் (அமெரிக்கா),
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலஸ் மேயர் தேர்தல் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் நித்யா ராமன், தற்போதைய மேயர் கரேன் பாசுக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யாராமன். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக அங்குள்ள கருத்துகணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நித்யா ராமன். இவருக்கு ஆறு வயது இருக்கும்போது, பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடும், மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நகரத் திட்டமிடலும் பயின்றார். இவர் ஒரு காலத்தில் சென்னைக்குத் திரும்பி, துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறிய இவர், வீடு இல்லாதவர்களுக்காக செலா (SELAH) என்ற அமைப்பைத் தொடங்கினார். மேலும், ‘மீ டூ’ இயக்கத்துடன் தொடர்புடைய ‘டைம்ஸ் அப் என்டர்டெய்ன்மென்ட்’ அமைப்பிலும் பணியாற்றினார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவு பெற்ற ஒருவரை தோற்கடித்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சலஸ் தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக கடைசி நேரத்தில் (பிப்.7-ம் தேதி) மனுத் தாக்கல் செய்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஆண்டு நடந்த நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். இந்நிலையில், மம்தானியைப் போல நித்யா ராமனும் லாஸ் ஏஞ்சல்ஸ் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மேயர் பாசை ஆதரிப்பதாக முதலில் கூறிய நித்யா ராமன், இப்போது அவருக்கு எதிராகப் போட்டியிடுவதால், 'அரசியல் துரோகி' என்று சில அமைப்புகள் இவரை விமர்சிக்கின்றன. ஆனால், 'இது நட்பு சார்ந்தது அல்ல, நகரின் எதிர்காலம் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பது சார்ந்தது' என்று நித்யா பதிலடி கொடுத்துள்ளார்.
நித்யா ராமன் தனது கணவர் சந்திரசேகரன் (தொலைக்காட்சி எழுத்தாளர்) மற்றும் இரட்டை குழந்தைகளான கர்ணா, காவேரி ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார். நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் என அவரது பன்முக அடையாளம் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஒரு முக்கிய மாநகரத்தை நிர்வகிக்கும் பொறுப்பிற்கு ஒரு தமிழ்ப் பெண் போட்டியிடுவது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.