உலக செய்திகள்

அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி ஏன்? வான்ஸ் பேட்டி

ஈரானின் அணு சக்தியின் செறிவூட்டப்பட்ட மையங்கள் அழிக்கப்பட்டு விட்டன என வான்ஸ் பேட்டியில் கூறினார்.

வாஷிங்டன்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் வருகை தந்தனர். இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர்.

இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். இந்த அமைதி பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத் நகரில் உள்ள தெருக்களை பாதுகாப்பு படையினர் தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், சாலைகளில் வாகனங்கள், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது. இந்த அமைதி பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் தொடங்கி நடந்தது.

ஈரானின் அதிகாரிகள், அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் நடந்த நீண்ட பேச்சுவார்த்தை ஏறக்குறைய 15 மணிநேரம் நீடித்தது. இன்று அதிகாலை 3.40 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். எனினும், இதுதொடர்பான எந்த விவரங்களும் ஊடகங்களுக்கு பகிரப்படவில்லை. இதனால், இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என வான்ஸ் கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, எங்களையும், ஈரானியர்களையும் இணைக்கும் வகையில், ஓர் ஒப்பந்தம் ஏற்படும் வகையிலான உதவிடும் பணியை மேற்கொண்டு, பாகிஸ்தான் ஆச்சரியம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இரு தரப்பு குழுவினரும் 21 மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஈரானியர்களுடன் பெரிய அளவிலான விவாதங்களை மேற்கொண்டோம். அது நல்ல செய்தி.

ஆனால், ஒப்பந்தம் எதுவும் ஏற்படாதது கெட்ட செய்தி. அமெரிக்காவுக்கான கெட்ட செய்தி என்பதனை விட, ஈரானுக்கான கெட்ட செய்தியாகவே உள்ளது. அதனால், ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலேயே நாங்கள் அமெரிக்காவுக்கு திரும்பி செல்கிறோம். எங்களுடைய நிபந்தனைகளை ஏற்க கூடாது என அவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஈரானியர்கள் அணு ஆயுதம் உபயோகிக்க கூடாது என்றும், எளிதில் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை வைத்திருக்க கூடாது என்பதே அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய இலக்காகும். அதனையே அவர்களிடம் நாங்கள் எதிர்பார்த்தோம். அதனை உறுதி செய்வார்கள் என்பதே எங்களுடைய தேவையாக இருந்தது.

அவர்களுடைய அணு சக்தியின் செறிவூட்டப்பட்ட மையங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அல்லது நீண்ட காலத்திற்கு ஈரானியர்கள் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் இருப்பார்களா? என்பதே தற்போதுள்ள கேள்வி. அதனை நாங்கள் பார்க்கவில்லை. விரைவில் அது சாத்தியப்படும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.