ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயேதுல்லா அலி கமேனியும் அமெரிக்காவின் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். பிப்ரவரி 28 ஆம் தேதி கமேனி கொல்லப்பட்ட நிலையில், 5 மாதங்கள் கழித்து அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயேதுல்லா அலி கமேனி உயிரிழந்து 5 மாதங்கள் கழித்து இறுதிச்சடங்குகள் நடப்பது ஏன்? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;
இஸ்லாமிய மரபுப்படி, ஒருவர் உயிரிழந்தால் முடிந்தவரை விரைவாக நல்லடக்கம் செய்வதே வழக்கம். ஆனால், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு அவரது மரணத்திற்குப் பிறகு சுமார் நான்கு மாதங்கள் கழித்தே நடைபெறுகிறது. இந்த தாமதம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட போர் சூழல், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ந்து நீடித்த ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உடனடியாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால், பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், காமேனியின் உடல் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டதாக சில தகவல்கள் வெளியானாலும், அதனை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இஸ்லாமிய மத விதிமுறைகளுக்கு ஏற்ப அவரது உடல் குளிர்சாதன வசதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும், ரசாயன முறையில் பதப்படுத்தப்படவில்லை என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. டாக்டர் முகமது ஓமர் கூறுகையில், "இஸ்லாமிய சட்டத்தில் விசேஷமான சூழ்நிலைகளில் உடலை குளிர்சாதனத்தில் பாதுகாத்து பின்னர் அடக்கம் செய்வதற்கு அனுமதி உள்ளது. காமேனியின் உடலும் அதே முறையில்தான் பாதுகாக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். தற்போது காமேனியின் உடல் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா வளாகத்தில் மூன்று நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஈராகின் ஷியா முஸ்லிம்களின் புனித நகரங்களான நஜஃப் மற்றும் கர்பலாவுக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர், ஜூலை 9-ஆம் தேதி அவரது பிறந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரேசா புனித தலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச்சடங்கை தேசிய ஒற்றுமையின் அடையாளமாக உலகுக்கு காட்ட ஈரான் அரசு மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.