செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல துறைகளில் மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் ஏ.ஐ., எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற 'தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026' நிகழ்ச்சியில் பங்கேற்ற பால் கிறிஸ்டியானோ, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்துப் பேசினார். அப்போது, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஏ.ஐ. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளேயே இதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
ஏ.ஐ. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது என்பது, பூமியில் என்ன நடக்க வேண்டும் என்பதை மனிதர்களுக்குப் பதிலாக ஏ.ஐ. அமைப்புகளே முடிவு செய்யும் நிலையை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தில் மனிதர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகலாம் என்றும் பால் கிறிஸ்டியானோ தெரிவித்துள்ளார். மேலும், இவை துல்லியமான அறிவியல் கணிப்புகள் அல்ல; தனது தனிப்பட்ட மதிப்பீடுகள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏ.ஐ. நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏ.ஐ. வளர்ச்சியைப் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற பால் கிறிஸ்டியானோவின் எச்சரிக்கை தொழில்நுட்ப உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.