உலக செய்திகள்

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் எதிர்ப்பு?

இஸ்ரேல் தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெருசலேம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், அதற்கு எதிராக இஸ்ரேலின் பல முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் போர் வெடித்தது. இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால் மோதல் லெபனானுக்கும் பரவியது. இப்படி மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களும் பதற்றம் அதிகரித்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளது. உலக நாடுகள் இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன.

இஸ்ரேல் அதிருப்தி

ஆனால், இஸ்ரேல் தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், லெபனானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு வலிமையுடன் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல, இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்மார் பென் கிவிர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்பந்தம் இஸ்ரேலை கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் ஒரு சுத்ந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு” என்று தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு

மேலும், “இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் பங்குதாரர்கள் அல்ல. ஹிஸ்புல்லாவை முழுமையாக ஒழிப்பதில் இருந்து பின்வாங்க முடியாது. எங்கள் ராணுவம் கைப்பற்றி சுத்திகரித்த பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடாது. வடக்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் பயங்கரவாதிகள் திரள அனுமதிக்க முடியாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.எனினும், அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், தனது முந்தைய அறிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களை பெற முடியாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், அதுவே அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்றும் நெதன்யாகு தெரிவித்திருந்தார்