ஒட்டாவா,
ஜெஸ்ஸி ஓக்ஸ் என்ற பெண் ஆபத்தான கரடியுடன் துணிச்சலோடு போராடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் உள்ள வனப்பகுதி கானனாஸ்கிஸ். இந்த வனப்பகுதியில் கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. அந்த மலைப்பகுதியில் கடந்த புதன்கிழமை காலையில் ஜெஸ்ஸி ஓக்ஸ் என்ற பெண் தனது வளர்ப்பு நாயான டச்சு செப்பர்ட் இன ‘ஸ்கோகி’ என்ற நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது திடீரென்று வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பழுப்பு நிறக் கரடி இனமான கொடூர கரடி ஒன்று அங்கு வந்தது. அந்த கரடி அவரது நாயை குறிவைத்து துரத்தத் தொடங்கியது. மேலும் நாயை பலமுறை தாக்க முயன்றதுடன், அந்த பெண்ணையும் சுற்றி வளைத்தது. இதையடுத்து அந்த பென் கரடியை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
கரடி அவர்கள் மீது பாய்வதற்கு முயன்றது. அப்போது அந்த பெண் பீதியடையாமல் நிதானமாக செயல்பட்டு துணிச்சலுடன் அந்த கரடியை நோக்கி உரத்த குரலில் "நில்", "போய்விடு" என்று தொடர்ந்து கடுமையாக கத்தினார். கரடி அவருக்கு அருகில் வந்ததால் அதனை திசை திருப்புவதற்காக கையில் வைத்திருந்த காபி கப்பை கரடியை நோக்கி வீசி எறிந்தார்.
கரடி அந்த காபி கப்பை ஆராயத் தொடங்கியது. அந்த நேரத்தில் அந்த பெண் மற்றும் அவரது நாயும் அங்கிருந்து தப்பித்து ஓடினர். பின்னர் கரடி காட்டுக்குள் ஓடி மறைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணும், நாயும் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக உயிர் தப்பினர்.
அந்த பெண்ணின் துணிச்சலான செயலை வனத்துறையினர் பாராட்டினர். மேலும் அந்த வனப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.