வாஷிங்டன்,
அமெரிக்காவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் புகைப்படம் பிரபல ஹாலிவுட் பாடகி மற்றும் நடிகையான ஜெனிபர் லோபஸ் போலவே இருப்பதாக இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அமெரிக்கா நாட்டின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிரீனா ஆன் குவாஸ்ட் (வயது 35). இந்த பெண் மான்டிசெல்லோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் பவர் டூல் பேட்டரிகளைக் கொள்ளையடித்தார். இதையடுத்து குவாஸ்ட் கொள்ளையடித்த வழக்கில் கடந்த மாதம் 30-ந்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைதுக்கு பின் போலீசாரால் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. அதற்கு முக்கிய காரணம், அந்த புகைப்படத்தில் அவரது முக அமைப்பு மற்றும் தலைமுடி ஸ்டைல் ஆகியவை அப்படியே பிரபல ஹாலிவுட் பாடகி மற்றும் நடிகையான ஜெனிபர் லோபசை ஒத்திருந்தது.
அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியப்படைந்து, சமூக வலைதளங்களில் பலவிதமான மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஜெனிபர் லோபஸின் உலகப் புகழ்பெற்ற பாடலான "ஜெனி பிரம் தி பிளாக்" என்பதை சுட்டிக்காட்டி, சிறைச்சாலை பிளாக்கை ஒப்பிட்டு இவரை "ஜெனி பிரம் டி-பிளாக்" என்று கிண்டலாக அழைத்து வருகின்றனர். தற்போது இந்த செய்தி மற்றும் அந்த பெண்ணின் புகைப்படம் உலகளவில் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.