செக்ரட்டரி பேர்ட்  
உலக செய்திகள்

பிரிட்டன் விலங்கியல் பூங்காவில் அரிய வகை பறவை இனத்தின் 5 குஞ்சுகள் பொரித்து சாதனை

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் செக்ரட்டரி பேர்ட் இனத்தை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ளது.

லண்டன்,

பிரிட்டனில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில், உலகிலேயே மிக அரிய வகையான ஆப்பிரிக்க 'செக்ரட்டரி பேர்ட்' இனத்தை சேர்ந்த 5 பறவை குஞ்சுகள் ஒரே நேரத்தில் பொரித்துள்ளன. இந்த பூங்காவின் 95 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

சாதனை

கடந்த 12 மாதங்களில் ஒட்டுமொத்த ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்வேறு பறவைகள் பாதுகாப்பு மையங்களில் சேர்த்து, வெறும் 3 செக்ரட்டரி பேர்ட் குஞ்சுகள் மட்டுமே பொரித்திருந்தன. ஆனால், தற்போது பிரிட்டனின் இந்த ஒரே பூங்காவில் மட்டும் 5 குஞ்சுகள் வெற்றிகரமாக பொரிந்துள்ளன. இது பறவையின ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்பிரிக்கா பறவையினம்

சர்வதேச பறவைகள் இனப்பெருக்க பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் 'ஜான்' மற்றும் 'ஜோலின்' என்ற ஜோடி பறவைகளுக்கே இந்த 5 குஞ்சுகளும் பிறந்துள்ளன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த பறவைகள், காற்றில் பறந்து வேட்டையாடுவதை விட, தங்கள் நீண்ட கால்களால் தரையில் உள்ள விஷ பாம்புகளை மிதித்து கொன்று வேட்டையாடும் அசாத்திய திறன் கொண்டவை.

அழிந்து வரும் இனம்

காடுகளில் இவற்றின் எண்ணிக்கை 6,700 க்கும் குறைவாக குறைந்துவிட்டதால், சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இவற்றை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரிட்டனில் 5 குஞ்சுகள் பிறந்துள்ள செய்தி உலக அளவில் இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.