உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பேட்டரி -மின்சாரக் கப்பல்: பயணிகள் சேவையை தொடங்கியது

இதன் பேட்டரி அமைப்பானது, மின்சாரத்தால் இயக்கப்படும் எட்டு வாட்டர்ஜெட்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.

ஆஸ்திரேலியா,

உலகின் மிகப்பெரிய பேட்டரி மின்சாரக் கப்பலான சீனா சோரில்லா (China Zorrilla), அதிகாரப்பூர்வமாக பயணிகள் சேவையை தொடங்கியுள்ளது.

பயணிகள் சேவை

ஆஸ்திரேலியாவின் தஸ்மானியாவில் உள்ள இன்காட் தாஸ்மேனியா (Incat Tasmania) நிறுவனம் தயாரித்த 130 மீட்டர் நீளமான பேட்டரி மின்சாரக் கப்பல், அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாடுகளுக்கிடையே பயணிகளை, கார்கள் மற்றும் பஸ்களை ஏற்றி செல்லும் சேவையை ஆரம்பித்துள்ளது.

இந்த கப்பல் முழுமையாக பேட்டரியால் இயக்கப்படுகிறது. 2,100 பயணிகள் மற்றும் 225 வாகனங்களை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. ரிவர் பிளேட் (River Plate) எனப்படும் 30 கடல் மைல் தூரத்தை, எரிபொருள் இல்லாமல், மின்சார சக்தியால் கடந்து செல்லும் திறன் இதற்கு உள்ளது.

இதுதொடர்பாக இன்காட் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் கிளிபோர்ட் கூறுகையில், “இது தஸ்மானியாவுக்கும், உலக கடல் போக்குவரத்து துறைக்கும் வரலாற்று சிறப்புமிக்க நாள். எங்கள் தொழில்நுட்ப திறனும், பணியாளர்களின் அர்ப்பணிப்பும் உலகம் இதுவரை காணாத சாதனையை உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சோதனை ஓட்டம்

முதலில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG - Liquefied Natural Gas) மூலம் இயங்கும் கப்பலை ஆர்டர் செய்ய திட்டமிட்டிருந்த புக்கெபஸ் (Buquebus) நிறுவனம், 2023-இல் முழுமையாக பேட்டரி சக்தியால் இயங்கும், மாசு இல்லாத கப்பலை தேர்ந்தெடுத்தது. பின்னர் 2025-இல் முதல் பேட்டரி அறை இயக்கத்தில் வந்தது. பின்னர் 2026-இல் தஸ்மானியாவின் டெர்வெண்ட் (River Derwent) நதி பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அமைதியான, சுத்தமான

இந்த கப்பல், பாரம்பரிய டீசல் இயந்திரங்களின் சத்தம், அதிர்வு, புகை போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கிறது. பயணிகள் அமைதியான, சுத்தமான, சுற்றுச்சூழல் நட்பு பயண அனுபவத்தை பெறுகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த முயற்சி உலகளாவிய கடல் போக்குவரத்து துறையில் மின்சார மாற்றத்திற்கான முக்கியமான முன்னேற்றமாக கருதுகின்றனர். தஸ்மானியாவில் தொடங்கிய இந்த சாதனை, உலகம் முழுவதும் மின்சாரக் கப்பல்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT