ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம், நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியான அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
“எனது வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப்படைகளும் உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதிகளில் ஒருவரை ஒழிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன.
உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் ஒளிந்துகொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால், அவரைப் பற்றிய தகவல்களை உளவுத்துறையினர் தொடர்ந்து எங்களிடம் வழங்கி வந்தனர் என்பது அவருக்கு தெரியவில்லை.
அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் தாக்குதல் திட்டங்களுக்கு உதவவோ முடியாது. அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.