சனா,
அமெரிக்கா, ஈரான் போரின் போது ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும், சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்களை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அரங்கேறின. அதேபோல், செங்கடல் வழியே செல்லும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ஏமன் அருகே செங்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று எரிட்ரியா நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 16 இந்தியர்கள் உள்பட 20 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், ஏமனில் இருந்து 30 நாட்டிகல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற கச்சா எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்துள்ளனர். 16 இந்தியர்கள் உள்பட 20 மாலுமிகளுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏமன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சோமாலியா அருகே 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில் தற்போது 16 இந்தியர்களுடன் சென்ற மற்றொரு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.