உலக செய்திகள்

ஏமன்: அரசுப்படையினர் வான்வழி தாக்குதல் - 7 பேர் பலி

தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்தனர்.

சனா,

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

தீவிரமடையும் மோதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

7 பேர் பலி

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம் மீது சவுதி அரேபியாவுடன் இணைந்து அரசுப்படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர். சந்தை பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

SCROLL FOR NEXT