சனா,
ஏமனில் பாதுகாப்புப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த மோதலில் 60 பேர் உயிரிழந்தனர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர் . இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. ஏமனின் தென்கிழக்கு மாகாணமான தைஸ் மாகாணத்தில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இரு தரப்பிலும் 60 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் ஏமனில் உள்நாட்டுப்போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.