சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் புகைப்படம் மட்டும் பதிவு செய்யும் செயலியாக இருந்த இன்ஸ்டாகிராம், நாளடைவில் வீடியோ பதிவேற்ற வசதியையும் கொண்டு வந்தது. டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாவில் அறிமுகமான ரீல்ஸ் வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அம்சங்களை இன்ஸ்டா அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டா பிளஸ் என்ற புதிய கட்டணச் சேவை அறிமுகம் ஆகியுள்ளது.‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சந்தா திட்டம், பயனர்களுக்கு கூடுதல் அம்சங்கள், தனி விருப்பங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கும். இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ. 299.
இன்ஸ்டாகிராம் பிளஸ் என்பது முற்றிலும் விருப்பத்தேர்வு மட்டுமே என்றும், இன்ஸ்டாகிராமை இலவசமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல இலவச சேவையை தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்காக மட்டுமே இந்த புதிய பிரீமியம் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தா மூலம், சாதாரண பயனர்களுக்குக் கிடைக்காத சில சிறப்பு அம்சங்களைப் பெறலாம். இன்ஸ்டாகிராம் எதிர்காலத்தில் கொண்டு வரவிருக்கும் சில புதிய அம்சங்களை, சாதாரண பயனர்களுக்கு முன்பாகவே பிளஸ் உறுப்பினர்கள் சோதித்து பார்க்கும் வாய்ப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், புதிய தொழில்நுட்ப மாற்றங்களை இன்ஸ்டாகிராம் பிளஸ் பயனர்கள் துவக்கத்திலேயே பயன்படுத்த முடியும்.