உலக செய்திகள்

ஈரான் எங்களிடம் மன்றாடி வருகிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

ஹார்முஸ் நீரிணையை திறக்க விரைவில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா ஹார்முஸ் பகுதியில் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்க வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கூடாது, அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று Iran தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஆனால் அதற்கு நேர்மாறாக, ஈரான் தன்னிடம் கெஞ்சி வருவதாக டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

ஈரான் தற்போது சரிவு நிலையில் இருப்பதாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் தலைமைத்துவ நெருக்கடியை சீர்செய்ய முயன்று வருவதாகவும், ஹார்முஸ் நீரிணையை திறக்க விரைவில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஈரான் அரசாங்கத்திற்குள் இருப்பதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளை அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று தான் நம்புகிறேன். இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரான் தரப்பில் யார் இந்தச் செய்தியைத் தெரிவித்தனர், குடியரசுக் கட்சி நிர்வாகத்தில் யார் அதை ஏற்றுக்கொண்டனர், மேலும் இந்த தகவல் பரிமாற்றங்கள் அமெரிக்காவுடன் நேரடியாக நடைபெற்றனவா அல்லது இடைத்தரகர் மூலம் நடைபெற்றனவா என்பது குறித்த கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை தரப்பிலிருந்தோ, டிரம்ப் தரப்பிலிருந்தோ தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.