பீஜிங்,
அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டது. அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றது.
எனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சீனா பெருமளவில் பணம் கொடுத்தது. நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறையின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “சீனா மீதான டிரம்ப்பின் குற்றாச்சாட்டு முற்றிலும் கற்பனையானது. சீனாவை களங்கப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தல்களில் தலையிடுவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.
சீனாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களில் சீனாவை ஒரு பிரச்சினையாக காட்டுவதை நிறுத்திவிட்டு, சீனா-அமெரிக்கா உறவுகளை வளர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங் விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தேர்தலில் சீனா தலையிட்டதாக டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் இத்தகைய தகவல் வெளியாகி இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சீன அதிபர் ஜின்பிங் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு வருகை தந்து, அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக சீனாவில் இருந்து அதிகாரிகள் குழுவினர் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் கூறிய கருத்துகள் இந்த பயணத்திட்டத்தை பாதிக்காது” என்று கூறினார்.
மார்கோ ரூபியோ தெரிவித்த இந்த தகவலை சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி லின் ஜியான் உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு இரு நாட்டு தலைவர்களின் ராஜதந்திர ஒத்துழைப்பு இன்றியமையாத மூலோபாய வழிகாட்டுதலை வழங்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் தொடர்ந்து பேசி தகவல்களை பரிமாறி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.