புதுச்சேரி
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய சிறை
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்காக அரபிந்தோ சொசைட்டி சார்பில் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. யோகா, ஓவியம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் சிறை வளாகத்தில் 2.6 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 வகையான பழங்கள், மூலிகை செடிகள் என 50 ஆயிரம் செடிகள் வளர்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடற்பயிற்சி கூடம்
இதேபோல் இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மாடு, ஆடு மற்றும் முயல்களும் வளர்க்கப்படுகிறது. முற்றிலும் சிறை கைதிகளை கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது கைதிகள் உடல்நலத்திற்காக சிறை வளாகத்தில் 3 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் தலைமை தாங்கினார். சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் வரவேற்று பேசினார். ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி கலந்துகொண்டு உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்தனர். விழாவில் அரவிந்தோ சொசைட்டி நிர்வாகிகள், சிறைத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
வருமானம் ஈட்டலாம்
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் கூறுகையில், 'கைதிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றங்களை காண முடிகிறது. தற்போது அவர்களின் உடல் நலனுக்காக 3 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் கைதிகளுக்கு மனரீதியிலான நிறைய மாற்றங்கள் வரும். அதோடு உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி பெறும் இங்கிருந்து விடுதலையாகி சென்றதும், உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியாளர்களாக சேர்ந்து வருவாய் ஈட்டலாம்' என்றார்.