"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என மகாகவி பாரதியார் பாடினார் அன்று. அதன்படி இன்று பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கும் பெண்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இருக்காமல், வேலை கொடுப்பவர்களாகவும் மாறவேண்டும் என்பதற்காக அவர்களை தொழில் முனைவோர்களாக்கி அழகு பார்க்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறார். தனது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக ஒரு துடிப்புமிக்க பெண் இருக்க வேண்டும் என்பதற்காக கீர்த்தனாவை அந்த பட்டியலில் இணைத்துள்ளார்.
அவரும், முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப பம்பரம் போல சுற்றி வந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அவருக்கு துணையாக நல்ல அனுபவம் வாய்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.விஜயகுமார் தொழில்துறை செயலாளராக, முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களையெல்லாம் அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என அழைத்து வருகிறார். இந்த சூழலில் பெண்களையும் தொழில் முனைவோர்களாக்கி சாதனை மங்கைகளாக வலம் வர வைக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு தீட்டியுள்ளது. அனைத்து திட்டங்களையும் வெற்றி என்ற பெயரிலேயே தொடங்கி வரும் விஜய், பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்துக்கும் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரையே சூட்டியுள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்கள் புதிய தொழில்களை தொடங்க வேண்டும், ஏற்கனவே அவர்கள் தொழில் தொடங்கியிருந்தால் அதை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான். அதற்கு நிதி உதவியையும் தமிழக அரசு கொடுக்க தயாராக இருக்கிறது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பையும் அரசு இணைத்துள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதியில் இருந்து தொழில் தொடங்க முன்வரும் 10 பெண்களை அடையாளம் கண்டு, அவர்கள் பற்றிய விவரங்களை அரசின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லை.
தொகுதிக்கு 10 பேர் என்று 234 தொகுதிகளிலும் 2,340 பெண் தொழில் முனைவோர் உருவாகப்போகிறார்கள். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் என்ற 'டிக்' நிறுவனம் ஆண்டுக்கு 9.95 சதவீத வட்டியுடன் வழங்கும். 9 ஆண்டுகளில் இந்த கடனை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டும். பெண்கள் தொழில் தொடங்குவதற்கு நிதி ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எத்தனையோ தொழில்கள் தொடர்பாக அவர்களிடம் திட்டங்கள், கனவுகள் இருந்தாலும் அதை செயல்வடிவத்துக்கு கொண்டுவர பணம் பெரிய தடையாக இருந்தது. இப்போது அவர்களின் அண்ணன் விஜய் அறிவித்துள்ள இந்த திட்டத்தின் வாயிலாக 2,340 பெண்கள் தொழில் தொடங்கி, தொழில் முனைவோர்களாக ஆகப்போகிறார்கள். மாமன் சீர் தரும் முதல்-அமைச்சர் விஜய், அண்ணனாக தரும் இந்த உதவியால் பெண்கள் தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்போகிறார்கள் என்று பெருமையுடன் சொல்கிறார் அமைச்சர் கீர்த்தனா.