பிரதமர் மோடி, நிர்வாகப் பொறுப்பில் முதல்-மந்திரியாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சபட்ச பதவியான பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் இருந்ததோடு மட்டுமல்லாமல், இன்னும் அந்தப் பொறுப்பில் தொடர்வதும் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. பொதுவாழ்வில் தனது கால் நூற்றாண்டு காலப் பயணத்தை வடிவமைத்த சேவை. நோக்கம், நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றின் மாண்புகளை அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெருமையோடு கூறிவருகிறார்.
அவரது இந்த 25 ஆண்டுகால முத்திரை, ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் ஒன்றான 'டுவெல்ப்த் நைட்' நாடகத்தில் இடம்பெறும் காலத்தால் மறக்கமுடியாத வரிகளை பிரதிபலிக்கிறது. அதில், "சிலர் புகழோடு பிறக்கிறார்கள்; சிலர் புகழை ஈட்டுகிறார்கள்; மற்றும் வேறு சிலர் மீது புகழ் திணிக்கப்படுகிறது. உன் விதி தன் கரங்களை விரித்து உன்னை வரவேற்கிறது.
உனது எளிய பழைய தோற்றத்தைக் களைந்துவிட்டு, புதிய கம்பீரத்தோடு வெளிப்படு. அரசியல் தத்துவங்களைப் பேசி, உனது உரையாடல்களை விவாதப்பொருளாக்கு" என்று கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் இந்த வரிகள் பிரதமர் மோடிக்குப் பொருந்துவதாக அமைந்துள்ளன.
ஒரு சிறிய டீக்கடையில் வேலை பார்த்த அவர், பா.ஜனதாவின் எளிய தொண்டராகத்தான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கட்சியின் மீது அவருக்கு இருந்த உறுதிப்பாடும், நேர்மையும் படிக்கட்டுகளாக அமைந்து, அவரை உயர் பதவிக்கு அழைத்துச் சென்றன.
குஜராத் முதல்-மந்திரி பதவியையும், பிரதமர் பதவியையும் அவர் நாடிச் செல்லவில்லை. இரண்டுமே அவரைத் தேடி வந்தன. ஆனால், இரு பதவிகளிலும் அவர் செய்த சாதனைகள் ஏராளம். அதை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும், 25 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட 25 முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
2001-ல் குஜராத் முதல்-மந்திரியாகப் பதவியேற்றவுடனேயே, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் முடிவு செய்தார். அதற்காக அங்குள்ள துறைமுகங்களை மேம்படுத்தத் தனியார் முதலீடுகளை ஈர்க்க அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாக, முந்திரா, ஹசீரா, பிபாவாவ் ஆகியவை பெரிய துறைமுகங்களாக உருவெடுத்துள்ளன.
நாட்டின் மொத்த சரக்குப் போக்குவரத்தில் 39 சதவீதத்தைக் கையாளும் அளவுக்கு அவை பரந்து விரிந்திருக்கின்றன. நீர் மேலாண்மைச் சீர்திருத்தங்களுக்காக 2003-ல் அவர் கொண்டுவந்த திட்டத்தின் மூலம் குஜராத்தில் 1.5 லட்சம் தடுப்பணைகள் கட்டப்பட்டன. இதன்மூலம் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைத்து வருகிறது.
2014-ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல், தூய்மை இந்தியா திட்டம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், ஏழைகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்குதல், வருமான வரிச் சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீடு, புத்தாக்கத் தொழில்களை ஊக்குவித்தல், மின்னணுப் பணப் பரிமாற்றம், சரக்கு மற்றும் சேவை வரி, மருத்துவக் காப்பீடு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல், விண்வெளிக் கொள்கை, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உத்வேகம் அளித்தல் உள்பட 25 முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
2024-ம் ஆண்டு வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை அமைக்கும் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதன் விளைவாக, கடந்த ஆகஸ்டு மாதக் கணக்கின்படி, 51 லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டு வருகிறது. உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.