ரெயில்வே நிர்வாகம் இரட்டை ரெயில் பாதைகளை, சாலைகளைப்போன்று 4 வழி ரெயில் பாதைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது. விரைவான பயணம், குறைந்த போக்குவரத்து நெரிசல், எரிபொருள் சிக்கனம், தரமான சாலை கட்டமைப்பு. குறைந்த விபத்துகள். பாதுகாப்பான பயணம் ஆகியவற்றை இலக்காக கொண்டு, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகளுடன் கூடிய தங்க நாற்கர சாலைத் திட்டத்தை 1999-ம் ஆண்டு அறிவித்தார். இதற்கான பணிகள் 2001-ம் ஆண்டு தொடங்கின. டெல்லி, மும்பை, சென்னை. கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் இந்த திட்டம், 5,846 கிலோ மீட்டர் நீளத்தில் நாட்டின் சாலை போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தங்க நாற்கர சாலை திட்டம் ஏற்படுத்திய மாற்றம். பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்தது. இதன் விளைவாக, 4 வழிச்சாலை மற்றும் அதற்கு மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் தற்போது 46,720 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் தற்போது சுமார் 6,806 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், அவற்றில் 3,200 கிலோ மீட்டருக்கும் அதிகமானவை 4 வழிச்சாலைகளாகவும், மேலும் 430 கிலோ மீட்டர் 6 மற்றும் 8 வழிச்சாலைகளாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரெயில் வழித்தடமும் இரட்டை பாதை, மின்மயமாக்கல் என மேம்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை ரெயில் பாதை இருப்பதால்தான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சதாப்தி ரெயில்கள், வந்தேபாரத் ரெயில்கள் என்று பல ரெயில்கள் காற்றை கிழித்துக்கொண்டு போகவேண்டிய இடத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை-கன்னியாகுமரி மற்றும் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில்பாதை இரட்டை ரெயில்பாதைகளாக இருக்கின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பயணிகளின் பயண நேரமும் மிச்சப்படுவதாக உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் இரட்டை ரெயில் பாதைகளை, சாலைகளைப்போன்று 4 வழி ரெயில் பாதைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிக நெரிசல் கொண்ட 7 வழித்தடங்களில் உள்ள 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழி பாதை போடும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த வழித்தடங்கள் நாட்டின் மொத்த ரெயில்வே வலையமைப்பில் வெறும் 16 சதவீதமாக இருந்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாளுகின்றன. இந்த 7 வழித்தடங்களில் 3 வழித்தடங்கள் அதாவது ஹவுரா-சென்னை. சென்னை-மும்பை, டெல்லி-சென்னை ஆகியவை தமிழ்நாட்டுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாகும். இதில் சென்னை-ஹவுரா வழித்தடத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது. 4-வது ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு பச்சை கொடி காட்டியுள்ளது.
இதற்காக ரூ.2,229 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த 4 வழிப்பாதைகளால் என்ன பயன் என்றால், இப்போது இரட்டை ரெயில் பாதைகளில் பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் ஒரே பாதையைப் பயன்படுத்துகின்றன. 4 வழி பாதை அமைக்கப்பட்டால் ஒரே திசையில் செல்ல பயணிகள் ரெயிலுக்கு ஒரு தண்டவாளத்தையும், சரக்கு ரெயிலுக்கு மற்றொரு தண்டவாளத்தையும் பயன்படுத்தமுடியும். இதனால் இரு போக்குவரத்தையும் துரிதமாக கையாள முடியும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாகச் செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. 4 வழிப்பாதை இருந்தால்தான். டிக்கெட் 'கன்பார்ம்' ஆகுமா? என்று எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் காத்திருப்போர் பட்டியலுக்கு சிவப்பு கொடி காட்டிவிட்டு, பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் ரெயில்களுக்கு பச்சைக் கொடி காட்டி இயக்கமுடியும் என்பது ரெயில்வே அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.