தமிழ்நாட்டில் 17-வது சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதுவரை நடந்த அத்தனை தேர்தல்களையுமே எந்த வன்முறையுமில்லாமல் தமிழ்நாடு அமைதியாக சந்தித்துவருகிறது. அதனால்தான் பல மாநிலங்களில் பல கட்டங்களில் நடக்கும் தேர்தல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ஓரிரு கட்டங்களாக நடக்கிறது. தற்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பொதுவாக தேர்தல் பிரசாரத்திலும், ஒட்டுப்போடுவதிலும் இளைஞர்கள் பங்குதான் அதிகமாக இருக்கும். அவர்கள் ஓட்டுப்போடுவது மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினர், உற்றார்-உறவினர்களையும் தாங்கள் விரும்பும் கட்சிக்கு மூளைச்சலவை செய்து ஒட்டுப்போட வைத்துவிடுவார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டு 1967-ம் ஆண்டு தேர்தல்தான். அப்போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு 'தீ' மாணவர்கள் மத்தியில் பற்றி எரிந்தது. அதுவே சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சியை தோல்வியை சந்திக்க வைத்து, மாநில கட்சியான தி.மு.க.வை ஆட்சிப்பீடத்திலும் அமர்த்தியது. அன்று இளைஞர் பட்டாளம் போட்ட விதை இன்றுவரை திராவிட கட்சிகள்தான், அதாவது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுவருகின்றன. இந்த தேர்தலிலும் இளைஞர்களின் பங்களிப்பு இருக்கப்போகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியால் சுமார் 97.34 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டபிறகு, இப்போது புதிய வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் இருக்கிறார்கள்.
இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேரும், பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேரும் இருக்கிறார்கள். ஆக ஆண்களைவிட 12 லட்சத்து 74 ஆயிரத்து 247 பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த பட்டியலில் 18 வயது பூர்த்தியான முதல்முறை வாக்காளர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 பேரும், இளம்வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் 20 முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேரும் துடிப்போடு வாக்களிக்கப்போகிறார்கள். ஆக இவர்கள் மட்டும் 21.2 சதவீதம் இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் 60 வயது முதல் 100 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையும் இளைஞர்களுக்கு சளைத்ததல்ல என சொல்லும்வகையில் 20 சதவீதம்பேர் இருக்கிறார்கள். அதில் 60 முதல் 69 வயதுவரை 67 லட்சத்து 69 ஆயிரத்து 737 பேரும், 70 முதல் 79 வரை 34 லட்சத்து 35 ஆயிரத்து 639 பேரும், 80 வயதை கடந்தவர்கள் மட்டும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேரும், இந்த எண்ணிக்கையில் 100 வயதை கடந்தவர்கள் மட்டும் 2 ஆயிரத்து 350 பேரும் இருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த 1952-ம் ஆண்டு நடந்த சுதந்திரத்திற்கு பின்பான முதல்தேர்தலிலும் வாக்களித்தவர்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள். இந்த தேர்தல் இளம்வாக்காளர்கள் மட்டுமல்லாது, பெண்களின் பங்களிப்போடு, முதியவர்களின் அனுபவம் என ஆகமொத்தத்தில் 5.73 கோடி பேரும் ஒருவிரல் புரட்சியை செய்து புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் முக்கிய பொறுப்பை வகிக்க இருக்கிறார்கள்.
இதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை. வரப்போகும் புதிய அரசுதான் அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்பதால் வாக்களிக்கப்போகும் 23-ந்தேதியை ஒட்டுமொத்த தமிழ்நாடே வருக! வருக! என்று வரவேற்றுக்கொண்டிருக்கிறது.