முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நிறைவேற்றப்போகும் நல்ல அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.
தமிழக அரசின் தலைமைச்செயலகமும், சட்டசபையும் இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையை கிழக்கிந்திய கம்பெனி, சென்னப்ப நாயக்கரிடம் இருந்து நிலத்தைப் பெற்று 4 ஆண்டுகளில் கட்டி முடித்து, 1644-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.
பின்னர் இது ஆங்கிலேயர்களின் முக்கிய நிர்வாக மையமாகத் திகழ்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசின் தலைமைச்செயலகமாக செயல்பட்டு வருகிறது. 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகம், சட்டசபை, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை கோட்டை என்று அழைக்கப்படும் தலைமைச்செயலகத்தில் இதுவரை 14 முதல்-அமைச்சர்கள் தங்கள் நிர்வாகத்தை நடத்தியுள்ளார்கள். முதல் 4 முதல்-அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். அதில் பெருந்தலைவர் காமராஜர் மட்டும் 9 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். 1967-ல் நடந்த தேர்தலில் முதல் முறையாக தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சரானார்.
அதன்பிறகு கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என்று திராவிட கட்சிகளின் அதாவது தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியே இருந்து வந்தது. திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பதிலாக, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கடந்த தேர்தலில் வாகை சூடி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 1978-ம் ஆண்டில் பிரதான கட்டிடத்தில் இடம் போதாததால், அதன் பின்புறத்தில் 10 மாடி கட்டிடம் கட்டப்பட்டு, அதற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயரிடப்பட்டது. தலைமைச்செயலகம் அமைந்துள்ள வளாகத்தில் 4 ஏக்கர் மட்டுமே தமிழக அரசுக்கு சொந்தமாக இருக்கிறது. மீதம் உள்ள நிலம் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிர்வாக வசதிக்காகவும் இந்த இடம் போதாது புதிய கட்டிடம் வேண்டும் என்ற முடிவில் அனைத்து முதல்-அமைச்சர்களும் புதிய தலைமைச்செயலகத்தை மாற்று இடத்தில் கட்ட விரும்பினார்கள்.
எம்.ஜி.ஆர். தலைநகரையே மெட்ராசில் இருந்து திருச்சிக்கு மாற்ற திட்டமிட்டார். கருணாநிதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டிடம் கட்டினார். ஆனால் அதற்கு பின்னால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை பல்நோக்கு ஆஸ்பத்திரியாக்கி விட்டு, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட முடிவு செய்தார். ஆனால் இவர்கள் யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் இப்போதுள்ள இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அடுத்த நூறாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகத்தை சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.
ஆனால் எந்த இடத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அவர் அறிவிக்கவில்லை. அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என்றாலும் இதுவரை இருந்த முதல்-அமைச்சர்கள் நினைத்து, நடக்காத திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றப்போகிறார். அதிகாரம் குவிந்த சென்னையின் வெள்ளை மாளிகையான 400 ஆண்டுகால தலைமைச்செயலக கட்டிடம் விரைவில் விடைபெற்றுச் செல்லப்போகிறது.