தலையங்கம்

உருவாகியது புதிய கூட்டணி

இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை உள்ளடக்கிய வலுவான 3-வது அணி களம் காண்கிறது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழக அரசியல் களத்தில் மேலும் ஒரு கூட்டணி களம் இறங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தே.மு.தி.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன.

இந்த கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயரிடப்பட்டது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதுதவிர, விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தேர்தலை தனித்து எதிர்கொண்டன.

108 தொகுதிகள்

இந்த தேர்தலில் த.வெ.க. ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகளை பெற்று 108 தொகுதிகளைக் கைப்பற்றியது. அடுத்ததாக தி.மு.க. கூட்டணி 1.54 கோடி வாக்குகளுடன் 73 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1.34 கோடி வாக்குகளை அறுவடை செய்து, 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. நாம் தமிழர் கட்சி 19,72,537 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

த.வெ.க. ஆட்சி

அதிக தொகுதிகளை வென்றும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. தவித்தது. அப்போது 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியும், தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை விட்டு விலகி, த.வெ.க.வோடு இணைந்து ஆட்சியை பெரும்பான்மையாக மாற்றியது.

மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும் ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன. மற்ற கட்சிகள் கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளன. இதுவரை தனி மரமாக நின்ற த.வெ.க., பல்வேறு கட்சிகளின் வருகையால் தோட்டமாக மாறியிருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை இணைத்து, தனது தலைமையிலான கூட்டணிக்கு 'மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' என்று முதல்-அமைச்சர் விஜய் பெயர் சூட்டியுள்ளார்.

தனது பெயரிலேயே வெற்றியை குறிக்கும் பொருளை கொண்டுள்ள விஜய், தான் தொடங்கிய கட்சிக்கும் 'வெற்றி' என்ற பெயரை சூட்டியதோடு, அரசு சார்பில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கும் அதே பெயரை பயன்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், தற்போது த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கும் 'வெற்றி' என்ற பெயரை சூட்டியிருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்டோபர் 9-ந்தேதி

இந்த சூழலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான 2 கூட்டணிகள் மட்டுமே போட்டியிட்ட நிலை மாறி, இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை உள்ளடக்கிய வலுவான 3-வது அணி களம் காண்கிறது. இதோடு கம்யூனிஸ்டு கட்சிகளும், நாம் தமிழர் கட்சியும் தனியாக போட்டியிடுகின்றன.

இந்த 5 முனை போட்டியில் எந்த அணி வெற்றிக் குதிரையில் ஏறி சவாரி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் 9-ந்தேதி வெளியாகும் தேர்தல் முடிவு சொல்லிவிடும்.

SCROLL FOR NEXT